'தொட்ட ஹப்பா' பண்டிகை கொண்டாட்டம்


தொட்ட ஹப்பா பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:15:50+05:30)

கோத்தகிரி பகுதியில் உள்ள கிராமங்களில் படுகர் இன மக்கள் ‘தொட்டஹப்பா' பண்டிகையை கொண்டாடினர். மாடுகளுக்கு உணவு வழங்கி காணிக்கை செலுத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி பகுதியில் உள்ள கிராமங்களில் படுகர் இன மக்கள் 'தொட்டஹப்பா' பண்டிகையை கொண்டாடினர். மாடுகளுக்கு உணவு வழங்கி காணிக்கை செலுத்தினர்.

தொட்ட ஹப்பா பண்டிகை

நீலகிரி மாவட்டத்தில் அட்டி என்று அழைக்கப்படும் கிராமங்களில் படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி ஹெத்தையம்மன் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் படுகர் இன மக்கள் வசித்து வரும் கிராமங்களில் கால்நடைகளுக்கு காணிக்கை செலுத்தும் வகையில் 'தொட்ட ஹப்பா' பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

பண்டிகையையொட்டி கோத்தகிரி அருகே திம்பட்டி, கடைகம்பட்டி, ஜக்கலோடை உள்பட பல்வேறு கிராமங்களில் படுகர் இன மக்கள் தங்களுக்கு சொந்தமான பசு மாடுகளை குளிப்பாட்டினார்கள். தொடர்ந்து மேள, தாளங்களுடன் ஊர் மக்கள் தங்களது வீடுகளில் கால்நடைகளுக்காக பிரத்யேக உணவை சமைத்து, அதை கிராமத்தில் உள்ள தொட்டமனைக்கு எடுத்து சென்றனர்.

மாடுகளுக்கு உணவு வழங்கினர்

அங்கு அனைத்து வீடுகளில் இருந்தும், கொண்டு வரப்பட்ட உணவை பொதுவாக ஒரு இடத்தில் படைத்து கால்நடைகளுக்கு வழங்கினர். பின்னர் கால்நடைகள் உணவை உண்ட பின்னர், மீதமுள்ள உணவை கிராம மக்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் பசு மாடுகளின் கால்களில் விழுந்து காணிக்கை செலுத்தினார்கள். வழக்கமாக ஜனவரி மாதம் பனி தாக்கத்தால் கடும் வறட்சி நிலவும். வறட்சியால் செடி, கொடிகள், புல்வெளிகள் காய்ந்து கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும்.

இதை தவிர்க்க பொங்கல் பண்டிகை முடிந்ததும் அனைத்து கிராமங்களிலும் கால்நடைகளுக்கு காணிக்கை செலுத்தி, அவற்றை வழிபடுவதன் மூலம் வறட்சி நீங்கும் என்பது ஐதீகம். இதை முன்னோர்கள் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு கடைபிடித்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

பாரம்பரிய நடனம்

இதைத்தொடர்ந்து பண்டிகையையொட்டி பாரம்பரியமாக விளையாடும் கில்லி, பந்து எறிதல் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடியும், தங்களது பாரம்பரிய நடனமாடியும் மகிழ்ந்தனர். இதே போல கோத்தகிரி சுற்று வட்டார படுகர் இன மக்கள் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் 'தொட்டஹப்பா' பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


Next Story