மின்கம்பத்தின் 'ஸ்டே' கம்பிகளை அகற்றாமல் ரூ.3¾லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் மின்கம்பத்தின் ஸ்டே கம்பிகளை அகற்றாமல் ரூ.3¾ லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள சிமெண்டு சாலையில் விபத்துக்கள் ஏற்படும் முன்பு ‘ஸ்டே’ கம்பிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் மின்கம்பத்தின் ஸ்டே கம்பிகளை அகற்றாமல் ரூ.3¾ லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள சிமெண்டு சாலையில் விபத்துக்கள் ஏற்படும் முன்பு 'ஸ்டே' கம்பிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சிமெண்டு சாலை
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட எழில்நகர் பகுதியில் குளக்கரை மேட்டுத்தெரு உள்ளது. இங்கு தமிழக அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 82 மீட்டர் தூரத்திற்கு 'பேவர் பிளாக்' எனப்படும் சிமெண்டு கற்களால் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே இந்த பகுதியில் சாலையின் அருகில் மின்கம்பம் இருந்து உள்ளது. இந்த மின்கம்பத்தின் 2 'ஸ்டே' கம்பிகள் சாலையிலேயே அமைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதியதாக அமைக்கப்பட்ட இந்த சாலையானது மின்கம்பத்தை ஒட்டிய படியே அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மின்கம்பத்தின் 'ஸ்டே' கம்பிகளை அகற்றாமல் சாலையின் நடுவில் வைத்தே அலட்சியப் போக்குடன் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
சிமெண்டு சாலையின் நடுவில் மின்கம்பத்தின் 'ஸ்டே' கம்பிகள் உள்ளதால் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரங்களில் எவரேனும் 'ஸ்டே' கம்பிகள் இருப்பது தெரியாமல் அந்த வழியாக வாகன்களில் வந்தால் அதன் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள். ஆனால் சாலை அமைக்கும் முன் ஆய்வு செய்யாத அதிகாரிகள் சாலை அமைக்கப்பட்ட பின்னரும் கண்டும் காணாதது போல் உள்ளதாக பொதுமக்கள் வேதனையாக தெரிவிக்கின்றனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் மக்கள் பயன்படுத்தும் வகையில் இல்லாமல் பெயரளவில் செய்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தின் 'ஸ்டே' கம்பிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.