திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த மீனவ இளைஞர்களுக்கு சான்றிதழ்

கடலூரில் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த மீனவ இளைஞர்களுக்கு ஏ.டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் சான்றிதழ் வழங்கினார்.
கடலூர்,
தமிழக மீனவர்களின், வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இந்திய கடலோரக் காவல்படை, இந்திய கப்பற்படை மற்றும் இதர பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக ரூ.90 லட்சத்தில் 6 மாத இலவச பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து 3 மாத கால இலவச பயிற்சியை, 3 மையங்களில் நடத்துவதற்கு தகுந்த அரசாணையும் முதல் அணி பயிற்சிக்கு ரூ.45 லட்சத்திற்கான நிதி ஒப்பளிப்பும் வழங்கப்பட்டது. அதன்படி தமிழக கடலோர மாவட்டங்களை சேர்ந்த தகுதி வாய்ந்த மீனவர்களின் வாரிசுகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் முதற்கட்டமாக தலா 40 பேர் கொண்ட 3 குழுக்களுக்கு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய பயிற்சி மையங்களில் நடத்தப்பட்டது.
சான்றிதழ்
கடந்த 14.3.2022 அன்று தொடங்கிய இந்த பயிற்சி வகுப்பில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து, கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள போலீஸ் மண்டபத்தில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ஏ.டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இதில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அடுத்த கட்டமாக 40 பேர் கொண்ட 3 குழுக்களுக்கு விரைவில் இலவச பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.