தமிழகத்தில் 11-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் 11-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்
x

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும், தமிழகத்தில் 11-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.

சென்னை,

வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடமேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வருகிற 8-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

கன்னியாகுமரி, ராமேஸ்வரம், நாகை மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

11-ந்தேதி வரை மழை

மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக வருகிற 11-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6-ந்தேதி (இன்று) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையிலான நாட்களில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் அளவிலும் வெப்பநிலை இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

8-ந்தேதி வரை தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளிலும், 9-ந்தேதி வரையிலும் வங்கக்கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை, சின்கோனா பகுதிகளில் அதிகபட்சமாக தலா 4 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story