தாரமங்கலம் நகராட்சி அலுவலகத்துக்குள் கழிவுநீருடன் மழைநீர் புகுந்ததால் பரபரப்பு-வெளியேற்ற வழி இல்லாமல் ஊழியர்கள் தவிப்பு

தாரமங்கலம் நகராட்சி அலுவலகத்துக்குள் கழிவுநீருடன் மழைநீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீரை வெளியேற்ற வழி இல்லாமல் ஊழியர்கள் திகைப்பில் உள்ளனர்.
தாரமங்கலம்:
கழிவுநீர் கால்வாயில் அடைப்பு
தாரமங்கலம் நகராட்சியில் அண்ணா சிலை முதல் பஸ் நிலையம் வரையிலான பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை பெய்யும் போது சாக்கடை நீர் சாலையில் வெளியேறி வருகிறது. இதனால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் சாக்கடை கால்வாய் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீரும், மழைநீரும் கலந்து நகராட்சி அலுவலகத்தை சூழ்ந்து கொண்டது.
அலுவலகத்துக்குள் புகுந்தது
மேலும் நகராட்சி அலுவலகத்துக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நகராட்சி ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். உடனே அலுவலகத்தில் தரையில் இருந்த கோப்புகளை பாதுகாப்பான இடத்தில் வைத்தனர்.
அனைத்து அறைகளிலும் சுமார் ஒரு அடி வரை தண்ணீர் தேங்கி நின்றது. ஆங்காங்கே உள்ள நாற்காலிகளில் அமர்ந்து அவர்களது வேலையை செய்தனர். இருந்தாலும் தண்ணீரை வெளியேற்ற ஊழியர்கள் நினைத்தனர். ஆனாலும் அதற்கு கூட வழி இல்லாமல் ஊழியர்கள் தவித்தனர். இதனால் தாரமங்கலத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிரந்தர தீர்வு
எப்போதெல்லாம் தாரமங்கலத்தில் கனமழை பெய்கிறதோ, அப்போதெல்லாம் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து நகராட்சி அலுவலகத்துக்குள் புகுவது வாடிக்கையாகி விட்டது. இதுதவிர குடியிருப்புகளுக்கும் தண்ணீர் புகுவதும், மக்கள் அடிக்கடி சிரமத்துக்கு ஆளாகுவதும் வழக்கமாகி விட்டது.
எனவே இதற்கு நிரந்தர தீர்வாக, நகராட்சி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய ேவண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.