கோடையை குளிர்வித்த சாரல் மழை


கோடையை குளிர்வித்த சாரல் மழை
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது. குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது. குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சாரல் மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வந்தது. இரவிலும் வெப்பம் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அதே சமயம் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல வெயில் அடித்தது. ஆனால் 11 மணிக்கு மேல் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டது. வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறி தென்பட்டது. அதைத் தொடர்ந்து பகல் 12 மணி அளவில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் சாரல் மழை பெய்தது. பொதுவாக மழை பெய்தால் சாலை ஓரம் ஒதுங்கி நின்று கொள்ளும் மக்கள், வெப்பம் காரணமாக நேற்று சாரல் மழையில் நனைந்தபடியே நடந்து சென்றதை பார்க்க முடிந்தது. மழை காரணமாக சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

அணைகள்

இதே போல மேற்கு மாவட்ட பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 34.96 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 36.30 அடியாகவும் உள்ளது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு வினாடிக்கு தலா 34 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திற்பரப்பு அருவி

திற்பரப்பு அருவியில் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. நேற்று காலையில் அங்கு சாரல் மழை பெய்ததால் குளு, குளு சீசன் நிலவியது.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அங்கு திரண்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தடுப்பணையில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.


Next Story