சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் நுகர்வோர் சேவை மையத்தில் முதல்-அமைச்சர் 'திடீர்' ஆய்வு

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் நுகர்வோர் சேவை மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தொலைபேசி மூலமாக பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
சென்னை,
மின் சேவை தொடர்பான புகார்கள் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் வகையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் 'மின்னகம்' என்ற புதிய மின்சார நுகர்வோர் சேவை மையத்தை கடந்த ஜூன் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த சேவை மையத்தில் புதிய மின்சார இணைப்பு தொடர்பான தகவல்கள், மின்சார அழுத்த ஏற்ற, இறக்கம், உடைந்த மின்சார கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்சார கம்பிகள், பழுதடைந்த மின்சார பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின்சார மாற்றிகள், மின்சார தடை குறித்த தகவல், குறைந்த மற்றும் உயர் மின்சார அழுத்தம் போன்ற மின்சார துறை சார்ந்த தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அதுதொடர்பான சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்று வருகிறார்கள். அத்துடன் சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
மு.க.ஸ்டாலின் 'திடீர்' ஆய்வு
இந்தநிலையில் இந்த சேவை மையத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென சென்றார். அவருடன் அமைச்சர்கள் வி.செந்தில் பாலாஜி, க.பொன்முடி ஆகியோரும் சென்றிருந்தனா்.
அப்போது அந்த சேவை மையத்தின் செயல்பாடுகள், பணிகள் உள்ளிட்டவை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மையத்தில் புகார்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது? தீர்வு காணப்பட்ட புகார்கள், நிலுவையில் உள்ள புகார்கள், அதற்கான காரணங்கள் உள்ளிட்டவை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கி கூறினார்.
புகார்களுக்கு விரைவில் தீர்வு தரப்படுகிறது தானே... என்று அதிகாரிகளிடம், மு.க.ஸ்டாலின் கேட்டார். புகார்கள் நிலுவையில் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கினார்.
'ஸ்டாலின் பேசுறேன்'
இதற்கிடையில் சேவை மையத்தில் புகார்களை பெற்றுக்கொண்டிருந்த ஒரு பெண் பணியாளரிடம் சென்று, அவரது பணி குறித்து முதல்-அமைச்சர் உற்றுநோக்கினார். ஒருகட்டத்தில் புகார் அளிக்கும் பொதுமக்களுடன் தொலைபேசியில் தானே பேசவும் தொடங்கினார். இதனால் புகார் அளிக்க தொடர்புகொண்டவர்கள் ஒருகணம் திகைத்து போனார்கள். பின்னர் புகாரை தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும் கூறினார்கள்.
சிலர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். புகார் அளிக்க தொடர்புகொண்ட ஒவ்வொருவரிடமும் 'நல்லா இருக்கீங்களா... என்ன செய்றீங்க... எந்த ஊர்... நான் யார் பேசுறேனு தெரியுதா? ஸ்டாலின் பேசுறேன்' என்று உரிமையுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது, அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இதனால் அவர்கள் அகமகிழ்ந்து போனார்கள்.
பொதுமக்கள் பாராட்டு
தமிழக முதல்-அமைச்சர் அவ்வப்போது போலீஸ் நிலையம், ரேஷன் கடைகள் போன்றவற்றுக்கு சென்று அங்கு மக்கள் பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்று திடீர் சோதனைகள் நடத்தி வருகிறார். இதுதவிர பொதுமக்கள் அழைப்பு மையம், அவசர பேரிடர் மையம் என பொதுமக்கள் குறைதீர்ப்பு மையங்களுக்கும் சென்று பணிகளை பார்வையிடுகிறார். பொதுமக்கள் பிரச்சினைகளை சரிசெய்து தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்து வருகிறார்.
அந்தவகையில் மின் நுகர்வோர் சேவை மையத்தில் 'திடீர்' ஆய்வு மேற்கொண்டதுடன், தானே முன்வந்து புகார்களையும் பெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
ரூ.259 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் கண்ணகப்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி , பீச் ரோடு (ரோச் பார்க் அருகில்) உள்ளிட்ட இடங்களில் ரூ.147 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய 110 கிலோ வாட் துணை மின் நிலையங்கள், தூத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் ரூ.13 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 33 கி.வோ துணை மின் நிலையங்கள் என மொத்தம் ரூ.161 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அதேபோல செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், சென்னை மாவட்டம் திருமுல்லைவாயல், ஈ.டி.எல், காஞ்சீபுரம் மாவட்டம் பழைய சீவரம், திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம், மாத்தூர், கடம்பத்தூர், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஆறுமுகநேரி உள்ளிட்ட இடங்களில் 51 துணை மின் நிலையங்களில் 602 எம்.வி.ஏ. அளவுக்கு திறன் அதிகரித்து ரூ.97 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 52 எண்ணிக்கையிலான மின் மாற்றிகளின் செயல்பாட்டையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
மேற்கண்ட ரூ.258 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டிலான மின்திட்டங்கள் மூலம் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயிகளுக்கு தரமான, தடையில்லா மின்சாரம் வழங்கிட வழிவகை ஏற்படும்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, ஆர்.காந்தி, தலைமை செயலாளர் வெ.இறையன்பு, எரிசக்தித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குனர் மா.ராமச்சந்திரன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.