தண்ணீர் இன்றி செடிகளில் கருகும் மிளகாய்


தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் இன்றி செடிகளில் மிளகாய்கள் கருகி வருகின்றன. தேர்த்தங்கல் கண்மாய் நீரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ராமநாதபுரம்

தண்ணீர் இன்றி செடிகளில் மிளகாய்கள் கருகி வருகின்றன. தேர்த்தங்கல் கண்மாய் நீரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மிளகாய் சீசன்

ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், காவனூர், குளத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் மிளகாய் சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல், குளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் தற்போது மிளகாய் செடிகளில் மிளகாய் காய்க்க தொடங்கியுள்ளன. ஆனால் மழையே பெய்யாததால் தண்ணீர் இன்றி மிளகாய் செடிகள் காய்ந்து வருகின்றன.

அதுபோல் தேர்த்தங்கல் கிராமத்தில் உள்ள கண்மாயில் ஓரளவு தண்ணீர் இருந்தும் அந்த தண்ணீரையும் மிளகாய் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாததால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தண்ணீர் பயன்படுத்த தடை

தேர்த்தங்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது:-

கடந்த ஆண்டு பருவமழை சீசனில் மழை பெய்யாததால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்திற்காக பறவைகள் வரவில்லை. முந்தைய ஆண்டுகளில் பெய்த மழையால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தற்போது வரை ஓரளவு தண்ணீர் இருந்து வருகின்றது பறவைகள் வராத நிலையிலும் இந்த கண்மாயில் உள்ள தண்ணீரை விவசாயத்திற்கு கூட பயன்படுத்தக்கூடாது என வனத்துறையினர் தெரிவித்துவிட்டனர். இதனால் நெல் விவசாயத்திற்கும் தண்ணீர் இருந்தும் பயன்படுத்த முடியாமல் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது மிளகாய் விவசாயம் நடைபெற்று வரும் நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடியாததால் மழையும் பெய்யாததாலும் சரியான விளைச்சல் இல்லாமல் செடிகளில் மிளகாய் காய்ந்து வருகின்றன. அதனால் தேர்த்தங்கல் கண்மாயில் உள்ள தண்ணீரை மிளகாய் விவசாயத்திற்கு பயன்படுத்த வனத்துறையினர் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story