கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்


கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
x

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

உலக ரட்சகர் என்று கிறிஸ்தவ மக்களால் போற்றப்படும் இயேசு பிறந்த நாளான டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதே போல இந்த ஆண்டு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. கிறிஸ்தவ மக்கள் நள்ளிரவில் பட்டாசுகளை வெடித்து கிறிஸ்துமசை வரவேற்றனர்.

பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையில் அந்தந்த பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரார்த்தனை

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது.

அதே போல சி.எஸ்.ஐ. ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நேற்று அதிகாலை 4 மணிக்கு நடந்தது. நாகா்கோவில் ஹோம் சர்ச்சில் போதகர் விக்டர் ஞானராஜ் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பங்கு மக்கள் ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் வெளியூர்களில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு செல்போன் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழ்ந்தனர்.

கடற்கரை கிராமங்கள்

ஆலயங்களில் பிரார்த்தனை முடிந்ததும் ஒவ்வொரு வீடுகளிலும் கிறிஸ்துமஸ் விருந்து தடபுடலாக நடந்தது.

குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் மீனவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆலயங்களில் கூட்டமாக அமர்ந்து பிரார்த்தனையும் செய்தனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக்கை பரிமாறிக் கொண்டனர். பண்டிகையையொட்டி சிறுவர்களும், சிறுமிகளும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். சில இடங்களில் சாலைகளில் ஒலிபெருக்கி அமைத்து கிறிஸ்து பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

சுற்றுலா தலங்கள்

அதே சமயம் இளைஞர்கள் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் சென்றபடி மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்ததையும் காண முடிந்தது. பின்னர் மாலையில் சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை கழித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க குமரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story