பள்ளி வேனில் இருந்து தூக்கி வீசப்பட்ட 4-ம் வகுப்பு மாணவி


பள்ளி வேனில் இருந்து தூக்கி வீசப்பட்ட 4-ம் வகுப்பு மாணவி
x

மார்த்தாண்டத்தில் பள்ளி வேனில் இருந்து 4-ம் வகுப்பு மாணவி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் பள்ளி வேனில் இருந்து 4-ம் வகுப்பு மாணவி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

4-ம் வகுப்பு மாணவி

மார்த்தாண்டம் பல்லன்விளையை சேர்ந்தவர் ஷஜீப் (வயது46). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகள் ஹென்ஷா ரோஸ் (9). இவர் மார்த்தாண்டம் மார்க்கெட் சாலையில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒயிட் மொமோரியல் மெட்ரிக் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அந்த மாணவி தினமும் காலையிலும் மாலையிலும் பள்ளிக்கு வேனில் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் காலையில் பள்ளி வேனில் வகுப்புக்கு சென்று விட்டு மாலையில் அதே வேனில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வேனை மார்த்தாண்டம் கொடுங்குளத்தை சேர்ந்த குணசேகரன் (63) என்பவர் ஓட்டி வந்தார்.

அவசர கதவு திறந்தது

அந்த வேன் மார்த்தாண்டம் கிறிஸ்டல் தெரு பூங்கா வளைவில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று வேனின் அவசர கதவு திறந்தது. இதில் வேனில் இருந்த மாணவி ஹென்ஷா ரோஸ் திடீரென்று சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் மாணவியின் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிற மாணவ-மாணவிகள் அலறினர். சத்தம் கேட்டு வேனை டிரைவர் உடனே நிறுத்தினார். விபத்து நடந்ததும் அந்த பகுதியை ேசர்ந்த பொதுமக்கள் அங்கு கூடினர். அவர்கள் மாணவியை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை

இந்த விபத்து குறித்து மாணவியின் தந்தை ஷஜீப் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் வேன் டிரைவர் குணசேகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story