ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு குவிந்த தொழிலாளர்கள்

ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு குவிந்த தொழிலாளர்கள்
உடுமலை
தேங்காய் உறி கூலி குறைப்பை கைவிடக்கோரி உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் திரண்டனர். வடமாநிலத்தவரால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.
தேங்காய் உறிப்பு கூலி
தேங்காய் உறிப்பதற்கு கூலியைக் குறைக்கக் கூடாது. வடமாநிலத் தொழிலாளர்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஏராளமான தொழிலாளர்கள் நேற்று திரண்டனர். இதனால் அங்குஅதிகமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களைஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்துக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில் 10 பேரை மட்டும் போலீசார் உள்ளே அனுமதித்தனர். அவர்கள் ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் ஆர்.டி.ஓ. தலைமையில், போலீஸ் துணை சூப்பிரண்டு (தாராபுரம்) முத்துக்குமரன் முன்னிலையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். இதனையடுத்து விரைவில் தேதி அறிவிக்கப்பட்டு ஆர்.டி.ஓ. தலைமையில் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் அடங்கிய குழுவினர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம் என்று ஆர்.டி.ஓ. உறுதி அளித்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
வேலை வாய்ப்பு
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-
தேங்காய் உறிக்கும் தொழிலை நம்பி 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். பொதுவாக ஒரு வருடத்தில் 3 முதல் 4 மாதங்கள் மட்டுமே தேங்காய் காய்ப்பு அதிக அளவில் இருக்கும். அந்த சீசனில் மட்டுமே எங்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பு கிடைக்கும். மற்ற காலங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகளை பகிர்ந்து செய்ய வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம். இதனால் நாள் ஒன்றுக்கு ஒரு தொழிலாளிக்கு ரூ. 300 முதல் 500 வரை மட்டுமே கிடைக்கும். .தற்போது தேங்காய் ஒன்றுக்கு 82 காசு கூலியாக பெற்று வருகிறோம். ஆண்டுதோறும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி 3 காசு முதல் 5 காசு வரை கூலி உயர்வு செய்வது வழக்கம்.
ஆனால் தற்போது வடமாநிலத் தொழிலாளர்கள் தேங்காய் ஒன்றுக்கு 55 காசுக்கு வேலை செய்வதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது உள்ளூர் தொழிலார்களின் கூலியை வியாபாரிகள் குறைத்து நிர்ணயம் செய்கிறார்கள். அது கட்டுப்படியாகாத கூலி என்பதால் நாங்கள் கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குழந்தைகள் பசியோடு தவிக்கும் நிலை உள்ளது. கடந்த 3-ந் தேதி வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி 82 பைசா கூலி என கோரிக்கை வைத்த நிலையில் 77 பைசாவாக குறைத்து வேலைக்கு அழைத்தார்கள்.
அதற்கு நாங்கள் ஒத்துக்கொள்ளாத நிலையில் ஆண்டியூர் பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்களை வைத்து தேங்காய்களை உறித்தனர்.அதனை உள்ளூர் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தினர்.இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 7 -ந் தேதி (நேற்று) பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று தெரிவித்தனர். ஆனால் திடீரென்று பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர். எனவே விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கு உரிய கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தொழிலாளர்கள் கூறினர்.