இடிந்து விழும் நிலையில் வேளாண் கிடங்கு கட்டிடம்
கொள்ளிடத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள வேளாண் கிடங்கு கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டப்படுமா?என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கொள்ளிடம்,ஜன.1-
கொள்ளிடத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள வேளாண் கிடங்கு கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டப்படுமா?என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
சேதமடைந்த வேளாண் கட்டிடம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு அருகில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது. இதில் வேளாண்மை கிடங்கு கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. தற்போது இந்த கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. கட்டிடத்தின் மேற்கூறையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இடுபொருட்கள்
மேலும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த கிடங்கு கட்டிடத்தின் அருகே உள்ள கழிவறை கட்டிடமும் எந்த பயனும் இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அரசின் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் உரங்கள், பூச்சி மருந்துகள், பயிர் நுண்ணூட்டங்கள், விதை நெல் மூட்டைகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் ஆகியவை இந்த கட்டிடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு பின்னர் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கிடங்கு கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.இங்கு இயங்கி வந்த வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மாற்றப்பட்டு கடந்த 2 வருடங்களாக புத்தூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
மழைநீர் கசிந்து சேதம்
மழை பெய்யும் போது தண்ணீர் வேளாண் கிடங்கு கட்டிடத்தின் மேற்கூரை வழியாக கசிந்து, உள்ளே இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் விதை மூட்டைகள், உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் சேதமடையும் அபாயம் உள்ளது.
இந்த வேளாண் கிடங்கு கட்டிடத்தின் மேல் கூரை பகுதியில் செடிகள் முளைத்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாப்பு இல்லாத கிடங்கு கட்டிடத்தில் வேளாண் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருவது அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களை சேதப்படுத்தும் நிலைக்கு உள்ளாக்கும்.
விவசாயிகள் கோரிக்கை
எனவே மிகவும் பழமையான கொள்ளிடம் வேளாண்மை கிடங்கு கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.