மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் பெயரில் வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க கலெக்டா் வேண்டுகோள்

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் பெயரில் வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதால் அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைவாய்ப்பு கிடைப்பதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும்.
எனவே மதி எக்ஸ்பிரஸ் இயக்குவதற்கு ஆர்வமும், தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளிகள், விதவை மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளை கொண்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுவானது ஒரு ஆண்டு பூர்த்தி செய்ததாகவும், தேசிய ஊரக வாழ்வாதார இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
மேலும் ஆர்வமுடைய நபர்கள் தங்கள் விவரத்துடன் விழுப்புரம் மாவட்ட மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குனர் அலுவலகத்திற்கு 30.6.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த விரிவான விவரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை கட்டிடத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் அலுவலகத்தை அலுவலக நேரத்தில் அணுகி தேவைப்படும் உரிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை விழுப்புரம் மாவட்ட கலெக்டா் பழனி தொிவித்துள்ளாா்.