பக்கவாத நோயால் அவதிப்பட்டவரை காப்பாற்றிய அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கலெக்டர் பாராட்டு


பக்கவாத நோயால் அவதிப்பட்டவரை காப்பாற்றிய அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள்  கலெக்டர் பாராட்டு
x

பக்கவாத நோயால் அவதிப்பட்டவரை காப்பாற்றிய அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கலெக்டர் பாராட்டு

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 58). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் பக்கவாத பிரச்சினையால் பாதிக்கப்பட்டார். ஏற்கனவே ரத்த அழுத்தம், மது குடிக்கும் பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் ஆகியவற்றுடன் இருந்த அவருக்கு வலதுபுற கை, கால் அசைவின்மை, வாய்குழறல் மற்றும் முகவாதத்துடன் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அன்று மாலை 4 மணியளவில் பொது மருத்துவப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அனுமதிக்கப்படும் போது சீரற்ற ரத்த அழுத்தத்துடன் முற்றிலும் இயக்கமற்ற நிலையில் இருந்த அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டு ரத்தநாளத்தில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தகுந்த நேரத்தில் அழைத்து வரப்பட்டு இருந்ததால் உயர்தர சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரின் இயக்கமற்ற வலதுபுற கை, கால் முழுமையான இயக்கத்திற்கான திறனை மீண்டும் அடைந்துள்ளது. மீண்டும் சி.டி.ஸ்கேன் செய்யப்பட்டு மூளையில் ரத்தநாள அடைப்பு நீங்கியது உறுதிபடுத்தப்பட்டது. தற்போது அவர் நலமோடு உள்ளார்.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பழனியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களுடன் கலெக்டர் ஸ்ரேயா சிங் கலந்துரையாடினார். சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றியதற்காக மருத்துவர்களுக்கு கலெக்டர் பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் (மருத்துவம்) ராஜ்மோகன் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.


Next Story