அரசின் அனைத்து திட்டங்களும் ஆதிதிராவிட மக்களுக்கு சென்றடைய வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்


அரசின் அனைத்து திட்டங்களும் ஆதிதிராவிட மக்களுக்கு சென்றடைய வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் அனைத்து திட்டங்களும் ஆதிதிராவிட மக்களுக்கு சென்றடைய வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

கண்காணிப்பு குழு கூட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஒவ்வொரு காலாண்டிலும் நடைபெறும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் துப்புரவு தொழிலுக்கான தடை மற்றும் அவர் தம் மறுவாழ்வுக்கான சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மற்றும் பற்றாளர் கூட்டம் ஆகியவை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் முன்னிலை வகித்தார்.

திட்டங்கள்

கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவ-மாணவிகள் விடுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அரசு திட்டங்கள் சிறப்பாக இருக்க வேண்டும். ஆதி திராவிட மக்களுக்கு அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டரால் நிர்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அந்த மக்களுக்கு காப்பீடு, வங்கிக்கடன் ஆகிய உதவிகளை வழங்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story