மூலிகை வனத்தில் கலெக்டர் ஆய்வு

வேதாரண்யம் தாசில்தார் அலுவலக மூலிகை வனத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் மூலிகை வனம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அங்கு மருத்துவ குணமுடைய வெற்றிலை, ஓமவள்ளி, கருந்துளசி, சிற்றரத்தை, இன்சுலின் செடிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் நடப்பட்டு, ஒவ்வொரு செடிகளின் முன்பு தனித்தனியே பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மூலிகை வனத்தில் நடப்பட்ட செடிகள் செழித்துவளர்ந்து பூத்து குலுங்குகின்றன.இந்த மூலிகை வனத்தை நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடவுசெய்த அனைத்து மூலிகை செடிகளும் செழித்து வளர்ந்து இருப்பதை வியப்புடன் பார்த்து அதிகாரிகளை பாராட்டினார். இதுபோன்று மூலிகைவனம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என என்றார். இந்த ஆய்வின் போது தாசில்தார் ஜெயசீலன், துணைதாசில்தார் வேதையன் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர். இதை தொடர்ந்து வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் இல்லம் எதிரே அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பொது கழிவறை கட்டும் பணியையும், நகராட்சியின் சார்பில் 95 தனிநபர் கழிவறை கட்டும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.