பெண்ணுக்கு ரூ.6¾ லட்சம் வழங்கிய கூட்டுறவு சங்கம்

பெண்ணுக்கு ரூ.6¾ லட்சம் வழங்கிய கூட்டுறவு சங்கம்
திருப்பூர்
திருப்பூர் வஞ்சிப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருடைய கணவர் நித்தியானந்தம். இவர் வஞ்சிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ரூ.3 லட்சம் டெபாசிட் செய்திருந்தார். இந்தநிலையில் நித்தியானந்தம் இறந்து விட்டார். கடந்த 2014-ம் ஆண்டு முதிர்வு தொகை பணத்தை திரும்ப வழங்காமல் கூட்டுறவு சங்கம் இருந்தது.
இதைத்தொடர்ந்து தமிழ்செல்வி, திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் முறையிட்டார். வழக்கை விசாரித்து ரூ.6 லட்சத்து 75 ஆயிரத்து 913-ஐ கூட்டுறவு சங்கம், தமிழ்செல்வியிடம் வழங்க வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பிறகும் பணம் வழங்கப்படவில்லை.
அதன்பிறகு தமிழ்செல்வி கடந்த 2020-ம் ஆண்டு நிறைவேற்று மனுவை திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்தார். வழக்கை நுகர்வோர் கோர்ட்டு தலைவர் தீபா, உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் விசாரித்தனர். இந்தநிலையில் வஞ்சிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினர் ரூ.6 லட்சத்து 75 ஆயிரத்து 913-ஐ தமிழ்செல்வியிடம் வழங்கியதை தொடர்ந்து நிறைவேற்று மனு முடித்து வைக்கப்பட்டது.