தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்கப்படுமா?
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு உபகரணங்கள் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் கோடைகாலத்தில் விளையாடுவதற்கு வந்த சிறுவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள இந்த விளையாட்டு உபகரணங்களை சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் சீரமைக்கப்படுமா?
-சின்னத்தம்பி, செந்தில் நகர், தர்மபுரி.
----------
எரியாத மின் விளக்குகள்
தர்மபுரி- சேலம் இருவழி சாலையில் தர்மபுரி நகரை ஒட்டியுள்ள ஒட்டப்பட்டி முதல் அதியமான்கோட்டை ரெயில்வே கேட் வரை உள்ள சாலை இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கிவிடுகிறது. இதனால் இந்த சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே சாலையில் மைய தடுப்பு பகுதியில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மனோகரன், ஒட்டப்பட்டி.
------
ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ள சாலை
பர்கூர் ஊராட்சி ஒன்றியம் காரகுப்பம் ஊராட்சி ஒன்பது பனைமரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஏர்கேட் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள சாலை, ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கிறது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையை, விவசாயிகளும், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளும் பொதுமக்களும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், பர்கூர்.
-------------
முன்பதிவு மையம் அமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது ஆம்னி பஸ்களையே நம்பி இருக்க வேண்டிய உள்ளது. ஆனால் ஆம்னி பஸ்களுக்கு முன்பதிவு மையம் இல்லை. அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்தாலும் ஓசூரில் இருந்தே செல்வதாக கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. எனவே அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிருஷ்ணகிரி பஸ் நிலையம் வந்து செல்லவும், கிருஷ்ணகிரியில் இருந்து அனைத:து நகரங்களுக்கும் முன்பதிவு செய்ய வசதியாக தனி முன்பதிவு மையமும் தொடங்க வேண்டும்.
-பிரபு, கிருஷ்ணகிரி.
--------
குரங்குகள் தொல்லை
கிருஷ்ணகிரி நகரில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக வரக்கூடிய குரங்குகள் கேபிள் வயர்களை அறுத்து சேதப்படுத்தி விடுகின்றன. மேலும் பூந்தொட்டிகளை உடைத்து விடுகின்றன. மேலும் இருசக்கர வாகனங்களின் பெட்ரோல் கவரில் இருக்க கூடிய ஆவணங்களை கிழித்து விடுகின்றன. இந்த குரங்குகளால் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அவற்றை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நசீர், கிருஷ்ணகிரி.
மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து ஆலாம்பாளையம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மினி டெம்போ ஒன்று அந்த வழியாக வந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக நேற்று நெடுஞ்சாலை துறையினர் மூன்று சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அந்த வழியாக செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்த பணியால் வேலைக்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு செலபவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மேம்பால பணியை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம், பள்ளிபாளையம்.
====
விளையாட்டு பூங்கா பராமரிக்கப்படுமா ?
சேலம் ஊராட்சி ஒன்றியம், வட்டமுத்தாம்பட்டி ஊராட்சி புது காலனியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாடும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கு பல்வேறு உபகரணங்கள் உள்ளது. தற்போது இவைகள் பராமரிக்கப்படாமல் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. விளையாட்டு பூங்காவை பராமரித்து, மாணவர்கள் விளையாடும் வகையில் வசதிகள் செய்து தர வேண்டும்.
-பி.ராஜா, வட்டமுத்தாம்பட்டி, சேலம்.