தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் வாணியம்பாடி கூட்ரோடு வரை சாலையின் இருபுறங்களிலும் கடைகளும், கடைகளின் முன்பு இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும், நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துகளும், அதனால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் பல முறை புகார் அளித்துனர். அதிகாரிகள் எப்போதுதான் நடவடிக்கை எடுப்பார்களோ?
-ராஜன், பர்கூர், கிருஷ்ணகிரி.
===
ஏரியை ஆக்கிரமித்த முள் செடிகள்
தர்மபுரி நகரை ஒட்டியுள்ள சோகத்தூர் ஏரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து பணி நடைபெற்றது. அப்போது ஏரியில் இருந்த அனைத்து கருவேல மரங்கள் மற்றும் முள் செடிகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் ஏரியில் மீண்டும் முள் செடிகள் அடர்ந்து வளர்ந்து வருகின்றன. இதனால் ஏரியில் மழைநீர் தேங்குவது குறைந்து வருகிறது. எனவே ஏரியை ஆக்கிரமித்து வரும் முள் செடிகளை வெட்டி அகற்ற விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், தர்மபுரி.
===
திறக்கப்படாத பூங்கா
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் 19-வது வார்டு தர்ம நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பசுமை வெளி பூங்கா அமைக்கப்பட்டது. இதனை அந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக பூங்கா பூட்டி வைக்கப்பட்டது. இதனால் பராமரிப்பு இல்லாமலும், திறக்கப்படாமலும் உள்ளது. இதனால் பூங்காவை அந்த பகுதியில் வசிப்பவர்கள் பொழுதுபோக்குக்காக பயன்படுத்த முடியாமல் அவல நிலையில் உள்ளது. மேலும் பூங்காவின் சுற்றுச்சுவரின் வெளிப்பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரித்து பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ரவிச்சந்திரன், சூரமங்கலம், சேலம்.
====
ஆபத்தான குழி
நாமக்கல் பூங்கா சாலையை ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக உழவர்சந்தைக்கு செல்வோர், சேலம், ஈரோடு, கோவை செல்லும் பஸ்கள் அந்த வழியாக தான் செல்கின்றன. அந்த சாலையில் அம்மா பூங்கா நுழைவு வாயில் அருகே சாலையோரமாக ஆபத்தான குழி ஒன்று ஏற்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் குழியில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அபாயகரமான அந்த குழியை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், நாமக்கல்.
----
சாலை சீரமைக்கப்படுமா?
சேலம் செவ்வாய்பேட்டை 30-வது வார்டு அச்சிராமசாமி தெருவில் இருந்து ராஜா தியேட்டர் செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க முன் வரவேண்டும்.
-சந்திரமோகன், செவ்வாய்பேட்டை, சேலம்.
===
சிக்னல் விளக்குகள் எரியவில்லை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பஸ் நிலையத்தின் முன்புறம் போக்குவரத்து கட்டுப்பாட்டு சிக்னல் உள்ளது. அந்த சிக்னல் விளக்குகள் கடந்த பல மாதங்களாக எரிவதில்லை. இதனால் பஸ் நிலையத்தையொட்டி உள்ள மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, சேலம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் உள்ளதால் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து சிக்னல் விளக்குகளை சரி செய்ய வேண்டும்.
-ச.பாஸ்கர், தாரமங்கலம், சேலம்.
====
வீணாகும் குடிநீர்
சேலம் அம்மாபேட்டை பெரிய கிணறு 1-வது தெருவில் கல்யாண கணபதி கோவில் அருகில் குடிநீர் குழாய் உடைந்து, வீணாக குடிநீர் சாக்கடையில் கலக்கிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீரை தேடிச்செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்து பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
-ஆர்.கோகுல், அம்மாபேட்டை, சேலம்.
====
குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் தொடக்கப்பள்ளி மற்றும் சுகாதார நிலையம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. அந்த குடிநீர் தொட்டியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் விழுகின்றன. மேலும் குழாயில் வரும் குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.
-மணிவண்ணன், இலக்கியம்பட்டி, தர்மபுரி.
====
சுகாதார சீர்கேடு
சேலம் மாநகரத்தில் அக்ரஹாரம், பஜார் வீதி ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் கடைகளில் உள்ள கழிவு பொருட்கள் ஆங்காகே சாலையில் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அங்கு காலையில் வியாபாரம் செய்பவர்களும், கடைக்கு வரும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழைக்காலங்களில் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே அங்குள்ள கழிவுபொருட்களை தினமும் அகற்றி தூய்மையாக வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வேலாயுதம், அம்மாபேட்டை, சேலம்.
===