தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
எலும்புக்கூடான மின்கம்பம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வாணியங்காடு- ஆத்தங்கரைப்பட்டி செல்லும் சாலையோரத்தில் அமைந்துள்ள மின்கம்பமானது சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் இதனை கடந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
முத்துப்பாண்டி, வாணியங்காடு.
தூங்கமுடியாமல் அவதி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புதுகுறிச்சியில் இரவுநேரங்களில் சிலர் சாலையில் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலியுடன் சுற்றுகிறார்கள். இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள், குழந்தைகள், வயதானவர்கள் தூங்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் இரவில் சுற்றித்திரிவோரை பிடித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயக்குமார், தேவகோட்டை.
எதிரொலி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இண்டங்குளம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சரியான முறையில் மின்இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனை செய்தியாக தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் செய்தி எதிரொலியாக அங்குள்ள வீடுகள் அனைத்திற்கும் மின்இணைப்பு தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
முருகேசன், இளையான்குடி.
நிற்காமல் செல்லும் பஸ்கள்
மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மடபுரம், கீலசொறிக்குலம், கொந்தகை போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் சில பஸ்கள் இந்த பஸ் நிறுத்தங்களில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசோக்குமார், திருப்புவனம்.
அறிவிப்பு பலகை அமைக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் அருகே செல்லும் காரைக்குடி-திருச்சி நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை, ஊர்பெயர் பலகை போன்றவை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கும் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இச்சாலையில் தேவையான அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும்.
திவ்யாபாரதி, கானாடுகாத்தான்.