கயத்தாறு சுங்கச்சாவடியில் காங்கிரசார் திடீர் சாலைமறியல்

கயத்தாறு சுங்கச்சாவடியில் காங்கிரசார் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 36 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கயத்தாறு:
கயத்தாறு சுங்கச்சாவடியில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்ட காங்கிரசார் 36 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காங்கிரஸ் நிர்வாகிகள்
கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கிய அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாத யாத்திரையாக காஷ்மீர் வரையிலும் செல்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல்காந்தியுடன் பாத யாத்திரையாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்றனர்.
இதில் பங்கேற்ற சேலம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று முன்தினம் இரவில் ஏராளமான வேன்கள், கார்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
சாலைமறியல்
இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது, தங்களது வாகனங்களை இலவசமாக அனுமதிக்க கோரியும், ஏற்கனவே சேலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தபோது, தங்களது வாகனங்களுக்கான பாஸ்டேக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாகவும் கூறி, சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே கயத்தாறு போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு காங்கிரசார் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக சேலம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 36 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.