உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பை முன்பே அறிவித்திருக்கலாமே? ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கேள்வி


உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பை முன்பே அறிவித்திருக்கலாமே? ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கேள்வி
x

உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சி சார்ந்த படிவங்களில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமி தயங்குகிறார் என்றும், உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பை முன்பே அறிவித்திருக்கலாம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம், சட்ட வல்லுனர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டின் வளாகத்தில் காத்திருந்த ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்து பேசினார். இதில் வேளச்சேரிக்கு உட்பட்ட தென்சென்னை (மேற்கு) மாவட்ட கட்சி மகளிரணி நிர்வாகிகள் பலரும் பங்கேற்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் மாவட்டச்செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்பே செய்திருக்கலாமே...

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் வருகிற 9-ந்தேதி நடக்கிறது. இந்தநிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில், 'உள்ளாட்சி தேர்தலில் நமது கட்சியின் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு நான் கையெழுத்திட தயார். நீங்களும் கையெழுத்திட்டு அந்த படிவத்தை என்னிடம் அனுப்ப வேண்டும்', என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தான் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இல்லை என்று கையெழுத்திடாமல் அந்த கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையை ஏற்படுத்திவிட்டார். தற்போது தொண்டர்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் புறக்கணிப்பு என்று எடப்பாடி பழனிசாமியை தவறாக வழிநடத்தும் கும்பல் அறிவித்திருக்கிறது. தேர்தல் புறக்கணிப்பு என்றால், தேர்தல் அறிவித்த உடனேயே அல்லது வேட்புமனுக்கு முன்பாகவே இதை செய்திருக்கலாமே...

கண்டனம்

இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க. போட்டியிட தயாராக இருந்தபோதும், தி.மு.க.வுக்கு துணை போகும் வகையில் இவ்வாறு செய்திருக்கிறார்கள். இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கும் படிவத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட தயங்கியதற்காக கண்டனம் தெரிவிக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், இந்த கடிதத்துடன் தலைமை கழக ஊழியர் ஒரு குறிப்பேடையும் எடுத்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வந்தார். ''கட்சி அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கக்கூடிய பொறுப்பு கட்சியின் பொருளாளருக்கு இருக்கிறது. எனவே இந்த படிவத்தில் கையெழுத்திட்டு, இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்தையும் பெற்று 'செக்' தரவேண்டும்'', என்று கேட்டுக்கொண்டார். அந்த படிவத்தில் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு, எடப்பாடி பழனிசாமிக்கும் அனுப்பினார்.

ஊழியர்களுக்கு ஊதியம் தர வேண்டும் என்பதை கூட கருத்தில்கொள்ளாமல் அந்த படிவத்திலும் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடவில்லை. இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் தரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story