சேத்தியாத்தோப்பு அருகே கார் மோதி தம்பதி காயம்: வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சேத்தியாத்தோப்பு அருகே கார் மோதி தம்பதி காயமடைந்தனர். விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). இவர் தனது மனைவி மலர்க்கொடியுடன்(42) நேற்று முன்தினம் மாலை வளையமாதேவி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, சிதம்பரத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் ஒன்று, இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காயமடைந்த இருவரும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுபற்றி அறிந்த கிராம மக்கள், வளையமாதேவி பஸ்நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்கக்கோரியும், சாலையின் நடுவில் தடுப்பு கட்டை அமைக்கக்கோரியும் கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார், மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.