சுற்றுலா தலங்களில் குவிந்த காதல்ஜோடிகள்


சுற்றுலா தலங்களில் குவிந்த காதல்ஜோடிகள்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் காதலர்கள் குவிந்தனர். அவர்கள் ஒருவருகொருவர் பரிசுகளை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

காதலர் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் காதலர்கள் குவிந்தனர். அவர்கள் ஒருவருகொருவர் பரிசுகளை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

காதலர் தினம்

காதல் என்பது தேன்கூடு அதை கட்டுவது என்றால் பெரும்பாடு என்றான் ஒரு கவிஞன். காதல் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்றாலும் மனிதர்களின் காதல் மகத்துவம் நிறைந்தது. இறுதிவரைக்கும் அந்த காதல் நிலைத்து நிற்பது மட்டுமின்றி, உயிரோட்டம் நிறைந்ததாகவும் இருக்கும்.

அப்படிப்பட்ட காதலை கொண்டாடும் விதமாக பிப்ரவரி மாதம் 14-ந் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று காதலர்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் காதலர்கள் குவிந்தனர். நாகர்கோவிலில் உள்ள பூங்காக்கள், வட்டக்கோட்டை, உதயகிரிகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம், முட்டம் கடற்கரை, லெமூர் கடற்கரை, காளிகேசம் என குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் காதலர்கள் உலாவந்ததை காணமுடிந்தது.

குமரியில் குவிந்தனர்

குறிப்பாக கன்னியாகுமரிக்கு காதலர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். அவர்கள் கடற்கரையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் உள்ள சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் காதலர்கள் சுற்றிவந்தனர்.

பரிசுகளை பரிமாறினர்

அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான காதலர்கள் வருகை தந்தனர். அவர்கள் ரோஜா மலர்களை பரிமாறி காதலர் தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்தனர். காதலர்கள் தோளில் கைபோட்டபடியும், கரம் கோர்த்தபடியும் கடற்கரையில் வலம் வந்தனர். ஒரு சிலர் மறைவான இடங்களில் அமர்ந்து இருந்தனர்.

சில காதலர்கள் கடற்கரையில் நின்றவாறு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பகுதியை தெரியும் படியாக செல்போன் மூலம் செல்பி எடுத்துக்கொண்டனர். கடை வீதிகளில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து வாங்கிச் சென்றனர். இதேபோல் ஒரே அரிசியில் இருவருடைய பெயர்களையும் பதிவு செய்து ஒருவருக்கொருவர் பரிசு ெபாருட்களாக வழங்கி மகிழ்ந்தனர்.

எச்சரித்த போலீசார்

மேலும், கடற்கரையில் உள்ள காட்சி கோபுரம் மற்றும் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களில் காதலர்கள் ஜோடியாக அமர்ந்து கடல் அழகை பார்த்து ரசித்தனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது, மறைவான இடங்களில் அமர்ந்து அத்துமீறிய சில காதல் ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Next Story