சீலேரி கிராமத்தில் மாடு விடும் விழா
சீலேரி கிராமத்தில் நடந்த காளைவிடும் விழாவில் காளைகள் முட்டியதில் 14 பேர் காயம் அடைந்தனர்.
காளைவிடும் விழா
அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் சீலேரி கிராமத்தில் பொன்னி அம்மன் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீரா பென் காந்தி, பா.ம.க. மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு காளை விடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
விழாவில் கலந்து கொள்வதற்காக 200 காளைகள் கொண்டுவரப்பட்டன. அதில் 163 காளைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கினர். வாடிவாசலில் இருந்து காலை 10 மணி முதல் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் ஓடும் பாதையில் இளைஞர்கள் திரண்டு இருந்ததால் பல காளைகள் தடுப்பு கம்புகளை முட்டிமோதி பார்வையாளர்களை காயப்படுத்தின.
அப்போது 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பகல் 2 மணிக்கு காளை விடும் விழா நிறுத்தப்பட்டது.
பரிசுகள்
பள்ளிகொண்டா மற்றும் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல் பரிசாக ரூ.55 ஆயிரம் வழங்கப்பட்டது. மொத்தம் 41 பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சீலேரி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.