மளிகைக் கடைகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வரும் மர்ம கும்பல்


மளிகைக் கடைகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வரும் மர்ம கும்பல்
x

உடுமலை பகுதியில் மளிகைக் கடைகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வரும் மர்ம கும்பலிடமிருந்து வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

உடுமலை பகுதியில் மளிகைக் கடைகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வரும் மர்ம கும்பலிடமிருந்துவியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசடி கும்பல்

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மளிகைக் கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில் பலவிதமான சிக்கல்களால் தொழில் நலிவடைந்து வரும் நிலையில், மோசடிக்கும்பலால் பாதிக்கப்படாமல் இருக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

'ஒரே தெருவில் பல கடைகள் அமைந்துள்ளதால் வியாபாரத்தை பங்கு வைக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன், போட்டியின் காரணமாக லாபமும் குறைந்து வருகிறது. அத்துடன் டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் எனப்படும் பெரிய அளவிலான கடைகள், ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்கள் பற்றாக்குறையால் தவிக்கும் நிலையும் உள்ளது.

இவை அனைத்தையும் கடந்து வியாபாரம் செய்து வரும் நிலையில் உடுமலையில் உலா வரும் மோசடிக்கும்பல் ஒன்று நூதனமான முறையில் வணிகர்களை ஏமாற்றி வருகிறது. அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள ஸ்டாலின் என்பவருக்கு சொந்தமான மளிகைக்கடையில், அன்னதானம் செய்வதற்காக பொருட்கள் தேவை என்ற பெயரில் நூதனமான முறையில் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருட்களை ஏமாற்றி எடுத்துச்சென்றுள்ளார்.

அன்னதானம்

இதுபோல மற்றொருவர் நேற்று உடுமலை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஜெயராஜ் என்பவரது மளிகைக்கடைக்கு, கையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது போன்ற ஒரு பையுடன் வந்துள்ளார். கோவிலில் அன்னதானம் செய்வதற்கு பொருட்கள் வேண்டும் என்று கூறி நீண்ட பட்டியலை வழங்கிய அவர் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருட்களை ஏமாற்றி எடுத்துச் செல்ல முயன்றார்.

கடைசி நேரத்தில் ஸ்டாலின் கடை மோசடி குறித்து தெரிந்த நபர் ஒருவர் கடை உரிமையாளரை எச்சரித்துள்ளார். அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இதுபோல இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் எத்தனை இடங்களில் ஏமாற்றியுள்ளனர் என்பது தெரியவில்லை. எனவே வியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணத்தை பெற்றுக்கொள்ளாமல் எந்த புதிய நபர்களுக்கும் பொருட்களை அனுப்ப வேண்டாம்'. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story