திற்பரப்பில் குளிக்க அலைமோதிய கூட்டம்

திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைவாக விழுந்தாலும் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருவட்டார்:
திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைவாக விழுந்தாலும் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திற்பரப்பு
கோடைகால விடுமுறையில் சுற்றுலாதலங்களை தேடி செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோடைவெயிலின் உக்கிரம் பொதுமக்களை வாட்டி வதைப்பதால் குளிர்ச்சியான இடத்தில் குளுமையான சூழலை அனுபவிக்க செல்கிறார்கள்.
அந்த வகையில் குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் குளிக்க தினமும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.
அலைமோதிய கூட்டம்
திற்பரப்பு அருவியில் குறைவான அளவே தண்ணீர் விழுகிறது. போதிய அளவு மலையோர பகுதிகளில் மழை பெய்யாததால் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. எனினும் அருவியில் குளிக்க நேற்று குடும்பம், குடும்பமாக மக்கள் வந்தனர்.
அங்கு உற்சாகமாக குளித்து குதூகலம் அடைந்தனர்.
இதேபோல் அருவியின் அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் தடுப்பணைக்கு சென்று படகில் சவாரி செய்து இயற்கையின் அழகை ரசித்தனர். நேற்று காலையில் இருந்ததை விட மதியத்திற்கு மேல் சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக திற்பரப்புக்கு வந்தனர். ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது.