மாவு அரவை மில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
கறம்பக்குடி, வடகாடு பகுதிகளில் மாவு அரவை மில்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. தீபாவளி பலகாரம் செய்வதற்கான ஆயத்த பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளி திருநாள் முதன்மையானது ஆகும். இந்த திருநாளில் வீடுகளில் விதவிதமான பலகாரம் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி மகிழ்வது வழக்கம். இதனால் தீபாவளி என்றாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் குதூகலம் தான். எனவே தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கியே அனைவரும் காத்திருப்பர்.
பலகாரம் செய்ய பெண்கள் மும்முரம்
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பலகாரம் செய்வதற்கான ஆயத்த பணிகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். தீபாவளிக்கு செய்யப்படும் முறுக்கு, அதிரசம், பருப்பு அடை, எள்ளு அடை, ரவா லட்டு, இனிப்பு மடக்கு, சீடை, மாவு பாகு உருண்டை போன்ற பலகாரங்கள் பிரசித்தி பெற்றவை ஆகும்.
பண்டிகைகளையும் கொண்டாட்டங்களையும் அர்த்தம் உள்ளதாக உருவாக்கி தந்த நமது முன்னோர்கள் அடை மழை காலத்தில் வரும் தீபாவளி பண்டிகையின்போது சில நாட்கள் கெடாமல் இருக்கும் உணவு பொருட்களை முன்கூட்டியே தயாரித்து வைப்பதற்கான முன் ஏற்பாடே தீபாவளி பலகாரங்கள் எனலாம்.
மாவு அரவை மில்களில் மக்கள் கூட்டம்
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் பலகாரங்கள் செய்வதற்கான மாவு அரைக்கும் பணியில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் கறம்பக்குடி பகுதியில் உள்ள மாவு அரவை மில்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. முறுக்கு, அதிரசம், ரவா லட்டு என பதார்த்தங்களுக்கு ஏற்றவாறு தனித்தனி மிஷின்களில் மாவு அரைக்கப்படுகின்றன.
பலகாரம் செய்ய தொடங்கி விட்ேடாம்
இதுகுறித்து கறம்பக்குடியில் பலகார மாவு அரைக்க வந்த செவ்வாய்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு இல்லத்தரசி கூறுகையில், பழைய காலங்களை போல் பலகார மாவு அரைக்க உரல், திருகை போன்றவற்றை யாரும் தற்போது பயன்படுத்துவதில்லை. அனைத்தும் எந்திர மயமாகி விட்டதால் மில்களை நோக்கியே வரவேண்டி உள்ளது.
கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்றால் தீபாவளி கொண்டாட்டங்கள் களை இழந்திருந்தது. தற்போது விவசாயம் தொழில் போன்றவை ஓரளவு கை கொடுத்திருப்பதால் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்து உள்ளோம். எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் தீபாவளி பலகாரம் செய்யும் பணிகளை தொடங்கி விட்டோம் என்று கூறினார்.
வடகாடு
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரிசி மற்றும் வரமிளகாய், மல்லி உள்ளிட்டவைகளை மாவு அரவை மில்களில் அரைத்து அதனை உலர வைத்து சேகரிக்கும் பணிகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.