கடலூா் மாவட்டத்தில் 77 இடங்களில் வெடிமருந்து குடோன்களில் போலீசார் திடீர் சோதனை

கடலூா் மாவட்டத்தில் 77 இடங்களில் வெடிமருந்து குடோன்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினா்.
கடலூர் மாவட்டத்தில் வெடிபொருள் குடோன்கள் மற்றும் வெடிபொருள் தயாரிக்கும் இடங்களை சோதனை செய்யும்படி போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டார். அதன்படி நல்லப்பரெட்டிபாளையம், மேட்டுக்குப்பம், இருசாம்பாளையம், சிங்கிரிகுடி, ராமாபுரம், மதலப்பட்டு, தூக்கணாம்பாக்கம், எம்.புதூர், சிதம்பரம் ஆதிநாராயணபுரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள வெடிமருந்து குடோன்களில் நேற்று காலை முதல் மாலை வரை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல் வெடிபொருள் தயாரிக்கும் இடங்கள் மற்றும் பட்டாசு விற்பனை செய்யும் கடைகள் என மாவட்டத்தில் 77 இடங்களில் போலீசார் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் கடலூர் பெண்ணையார் ரோட்டில் பிரகாஷ் (வயது 55) என்பவர் அனுமதிக்கப்படாத இடத்தில் பட்டாசுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் திருப்பாதிரிப்புலியூர் மோகினி பாலம் அருகில் உமா (55) என்பவர் பட்டாசு கடைக்கான உரிமத்தை புதுப்பிக்காமல் வெடிமருந்து வைத்திருந்தார். இதையடுத்து பிரகாஷ், உமா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.