தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கரூர் மாவட்டம், செம்படாபாளையம் பகுதியில் புகழூர் வாய்க்காலில் இருந்து முதலியார் வாய்க்காலுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. அந்த இடத்தில் வாய்க்காலில் குறுக்கே தண்ணீரை தேக்கி வைப்பதற்காக ஷட்டர் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஷட்டர் இருக்கும் இடத்தில் தற்போது தண்ணீர் வராததால் புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் அப்பகுதி குடியிருப்புப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உள்ளிட்டவை தேங்கி நிற்கின்றன. இந்த தேங்கி நிற்கும் கழிவு நீரில் ஏராளமான பிளாஸ்டிக் கப்புகள், கவர்கள் மற்றும் ஆகாயத்தாமரைகள் தேங்கி நிற்கின்றன. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு அந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செம்படாபாளையம், கரூர்.

சாலையில் திரியும் ஆடுகள்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி நகரப் பகுதிகளில் பல இடங்களில் ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. தங்கள் ஆடுகளை வீட்டில் கட்டி வைத்து வளர்க்காமல் நகரப் பகுதியில் கொண்டு வந்து விட்டுவிடுகிறார்கள். இவை இப்பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் மற்றும் தெருக்களில் கொட்டி வைக்கப்படும் குப்பைகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை சாப்பிட்டு வருகிறது. எப்போதும் ரோடுகளில் சுற்றித்திரிந்து வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. ரோட்டில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்லும் நிலை இருக்கிறது. ஆடுகளின் திடீர் குறுக்கீட்டால் நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரவக்குறிச்சி, கரூர்.


Next Story