தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத உயர்கோபுர மின் விளக்கு
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை மடத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு கடந்த 6 மாதங்களாக எரியாமல் உள்ளது. இந்த இடம் கடைகள் மற்றும் வனிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் கடைவீதிக்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். வெளியூர்களுக்கு வேலை நிமித்தமாக பஸ்களில் சென்று வரும் பெண்கள் இரவு நேரங்களில் அச்சத்துடனே செல்கின்றனர். பொதுமக்கள் மடத்துக்கடை சாலையினை கடக்கும்போது இரவு நேரங்களில் அதிக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் உடனடியாக பழுதடைந்துள்ள உயர் கோபுர மின் விளக்கினை சீரமைத்து ஒளிரச் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆதனக்கோட்டை, புதுக்கோட்டை.
ஆபத்தான மின்கம்பங்கள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான் ஊரணி கிராமத்தில் விவசாயிகளுக்கு மின்வினியோகம் செய்யப்படும் பல்வேறு மின்கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கருப்பையா, தொண்டைமான்ஊரணி, புதுக்கோட்டை.
குடிநீர் இன்றி குழந்தைகள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் புள்ளான்விடுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்கும், குழந்தைகள் குடிப்பதற்கும் தண்ணீர் வசதி இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது கோடைகாலம் நடைபெறுவதால் குழந்தைகள் தண்ணீர் இன்றி பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்திற்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
லோகநாதன், புல்லான்விடுதி, புதுக்கோட்டை.