'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வாகன ஓட்டிகள் அவதி

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பெரியார் நகர் விலக்கில் இருந்து பாரதியார் நகர் மற்றும் ரெயில்வே சுரங்கப்பாதை வரை சாலை மிகவும் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி அந்த சாலையை சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.

அய்யப்பன், சுத்தமல்லி.

வாறுகால் சேதம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி 10-வது தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சிமெண்டு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், இந்த பள்ளம் இன்னும் சீரமைக்கப்படவில்லை. மேலும், தெருவில் இருபுறங்களிலும் வாறுகால் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்குவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை, வாறுகாலை சீரமைக்க வேண்டுகிறேன்.

பிரம்மநாயகம், புளியங்குடி.

குடிநீர் குழாயில் உடைப்பு

கடையம் யூனியன் ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அருகில் குடிநீர் குழாயில் கடந்த 2 வாரங்களாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் பஸ் நிறுத்த பகுதி சேறும், சகதியுமாக கிடப்பதால் பயணிகள் நிழற்கூடம் உள்ளே பொதுமக்கள் செல்ல முடியாமல் பஸ்சுக்காக சாலையில் வெயிலில் காத்திருக்கும் அவலம் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

அம்ஜத், முதலியார்பட்டி.

பஸ் இயக்க வேண்டும்

கடையம் அருகே உள்ள சிவசைலம், பங்களா குடியிருப்பு, அண்ணாநகர், கருத்தப்பிள்ளையூர், பூவன்குறிச்சி ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் வெளியூர்களில் படித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் காலை 7.25 மணிக்கு கீழாம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் ரெயிலிலும், 8 மணிக்கு தென்காசி செல்லும் ரெயிலிலும் பயணம் செய்து வருகிறார்கள். ஆனால், மாணவர்கள் ரெயில் நிலையத்திற்கு செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். எனவே, சிவசைலத்தில் இருந்து கருத்தப்பிள்ளையூர் வழியாக கீழாம்பூர் ரெயில் நிலையத்திற்கு பஸ் இயக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

ஆலங்குளம் ஒன்றியம் புதுப்பட்டி கிராமம் ராம்நகரில் சுமார் ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். எனவே, அதிகாரிகள் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

உச்சிமாளி, ராம்நகர்.

குண்டும், குழியுமான சாலை

தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகம் பின்புறம் மடத்தூர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். ஆகவே, இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

பாலசுப்பிரமணியன், கோரம்பள்ளம்.

சாலையோர முட்செடிகள் அகற்றப்படுமா?

தூத்துக்குடி-ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் அய்யனார்புரத்தில் இருந்து பனையூர் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு முட்செடிகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் வருவது தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

நடராஜன், பனையூர்.

எரியாத மின்விளக்கு

கோவில்பட்டி கதிரேசன் கோவிலுக்கு செல்லும் மலைப்பகுதியில் 2 உயர்கோபுர மின்விளக்கும், மின்கம்பங்களுக்கும் உள்ளன. இதில் ஒரு உயர்கோபுர மின்விளக்கு, மின்கம்பத்தில் உள்ள மின்விளக்குகளும் எரியாமல் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் கோவிலுக்கு சென்று திரும்பும் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள். பக்தர்கள் வசதிக்காக மின்விளக்குகளை எரியவைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

பாலமுருகன், கோவில்பட்டி.

சேதமடைந்த மின்கம்பம்

கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சி அன்னை தெரசா நகர் பிள்ளையார் கோவில் தெரு பின்புறம் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

மாரிமுத்து, அன்னை தெரசா நகர்.


Next Story