தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:45 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

நெல்லையை அடுத்த பேட்டை செக்கடி பஸ் நிறுத்தம் அருகில் சேரன்மாேதவி மெயின் ரோட்டின் குறுக்கே செல்லும் வாய்க்கால் பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வாய்க்காலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ஆறுமுகம், பேட்டை.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

கூடங்குளம் அருகே இருக்கன்துறை கஸ்பா மேல தெருவில் வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-தங்கதுரை, இருக்கன்துறை.

சுகாதார வசதி அவசியம்

மூலைக்கரைப்பட்டி அருகே கடம்பன்குளம் கிராமத்தில் சுகாதார வளாகம் இல்லாததால் பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலநிலை உள்ளது. எனவே அங்கு பொது சுகாதார வளாகம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-மணிகண்டன், கடம்பன்குளம்.

சாய்ந்த மின்கம்பம்

களக்காடு அருகே பத்மனேரி- சிங்கிகுளம் சாலையில் ஆற்றங்கரை அருகில் உள்ள விவசாய நிலத்தில் மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-வானுமாமலை, பத்மனேரி.

சாலை பணியால் மூச்சுத்திணறல்

நெல்லை- பாபநாசம் இடையே சாலை விரிவாக்க பணிக்காக, கல்லிடைக்குறிச்சி, காருகுறிச்சி, வெள்ளாங்குளி உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டி, ஜல்லி கற்களை நிரப்பியுள்ளனர். அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது தூசுக்கள் எழும்புவதால் பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு காலை, மாலையில் சாலையில் தண்ணீர் தெளித்து பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-பீர் காதர், சேரன்மாதேவி.

வழிகாட்டு பலகைகளை மறைக்கும் மரக்கிளைகள்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை- கோவில்பட்டி ரோடு, மேல பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் குறுக்கே வழிகாட்டு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மறைக்கும் அளவுக்கு சாலையோரம் மரக்கிளைகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் வெளியூர் பயணிகள் வழி தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே வழிகாட்டு பலகைகளை மறைக்கும் மரக்கிளைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-மணி, கழுகுமலை.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

திருச்செந்தூர் அருகே நத்தக்குளம் கிராமத்தில் இருந்து சீனந்தோப்பு வழியாக ஆறுமுகநேரிக்கு செல்லும் வகையில் இணைப்பு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. சுமார் 6 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையில் பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் சீனந்தோப்பு பகுதியில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்காமல் பல மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை வேண்டுகிறேன்.

-நசீர், நத்தக்குளம்.

ஓடையில் தேங்கிய குப்பைகள்

கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கும், உதவி கலெக்டர் அலுவலகத்துக்கும் இடையே உள்ள நீர்வரத்து ஓடையில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், குப்பைக்கூளங்கள் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே ஓடையை தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-பாலமுருகன், கோவில்பட்டி.

பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்கள்

கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையத்துக்குள் பெரும்பாலான பஸ்கள் செல்லாமல் நாற்கர சாலையின் அருகிலேேய நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழுகின்றன. எனவே கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-கணேசன், கோவில்பட்டி.

சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

சாத்தான்குளம் பேரூராட்சி 13-வது வார்டு தட்டார்மடம் ரஸ்தா தெருவுக்கு செல்லும் வழியில் சாலைேயாரம் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

-விஜயன், சாத்தான்குளம்.

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் இருந்து பொட்டல்புதூர் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அங்கு சேதமடைந்த சாலையை உடனே சீரமைத்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

தேங்கிய கழிவுநீரால் சுகாதாரக்கேடு

கீழப்பாவூர் கீரைத்தோட்ட தெருவில் வாறுகாலில் அடைப்புகள் உள்ளதாலும், மேடுபள்ளமாக இருப்பதாலும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலை தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-கதிரேசன், கீழப்பாவூர்.

பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

வீரகேரளம்புதூரில் இருந்து கடையநல்லூர் செல்லும் அரசு பஸ்சில் காலை, மாலையில் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் காலை, மாலையில் கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-மாரியப்பன், சாம்பவர்வடகரை.

நூலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா?

கடையநல்லூர் தாலுகா மடத்துப்பட்டி பாம்புகோவில் சந்தை பகுதியில் அரசு கிளை நூலகம் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. எனவே அங்கு நூலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-ராமச்சந்திரன், மடத்துப்பட்டி.

தெருநாய்கள் தொல்லை

தென்காசி அருகே ஆய்க்குடி பேரூராட்சி கம்பிளி கிராமத்தில் தெருநாய்கள் தொல்ைல அதிகமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-கலைச்செல்வம், கம்பிளி.

அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் நியமிக்கப்படுவார்களா?

தென்காசி தாலுகா அரியப்பபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 டாக்டர்கள் பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றி வருகிறார். இதனால் அங்கு நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே அங்கு போதிய டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-இசக்கிசெல்வன், திப்பணம்பட்டி.


Next Story