தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

சாலை வசதி வேண்டும்

கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஹவுசிங் போர்டு காலனியில் சாலை வசதி இல்லை. மேலும் அங்கு தெரு விளக்குகளும், தெருக்குழாயும் இல்லை. இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்ல பெண்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சாலை வசதி செய்து, தெருவிளக்கு அமைத்து, குடிநீர் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாஹீர், குளச்சல்.

குளத்தை பராமரிக்க வேண்டும்

குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட காவல்ஸ்தலம் பகுதியில் இரட்டைக்குளம் உள்ளது. இங்கு நீர்த்தாவரங்கள் மற்றும் பாசிகள் வளர்ந்து குளத்து நீர் மாசுபட்டு கிடந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசியல் கட்சியினர் குளத்தில் வளர்ந்து கிடந்த நீர் தாவரங்களை அகற்றி, குளத்து நீரை பயன்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்தனர். அதன்பிறகும் சரியான பராமரிப்பு இல்லாததாலும், கழிவுநீர் கலப்பதாலும் மீண்டும் குளத்து நீர் மாசுபடும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர் வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவசகாயம், குலசேகரம்.

சுகாதார சீர்கேடு

தோவாளை தாலுகா, பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை முகம்மது கார்டன் செல்லும் வழியில் குப்பைகள் சிதறி கிடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் அதிகமாகியுள்ளது, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் ஆபத்து உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஷேக் அப்துல் காதர், மார்த்தால், திட்டுவிளை.

காத்திருக்கும் ஆபத்து

நாகர்கோவில் வடசேரி ஆரம்ப சுகாதார நிலையம் எதிர்ப்புறம் அசம்பு ரோட்டில் நெருக்கடி மிகுந்த பகுதியான விநாயகர் கோவிலின் முன்பு 2 சிமெண்டு சிலாப்புகள் உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும். இல்லை என்றால் அங்குள்ள ஓட்டையில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே காத்திருக்கும் ஆபத்தை உணர்ந்து உடைந்த சிமெண்டு சிலாப்புகளை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ்குமார், வடசேரி.

வீணாகும் குடிநீர்

வில்லுக்குறி அருகே கொன்னக்குழிவிளை பகுதியில் இருந்து குழாய் மூலம் பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு செல்லும் ஒரு குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியே செல்கிறது. அந்த பகுதியில் ஒரு குழாய் அமைத்தாவது குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கை ஆகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரமேஷ், கொன்னக்குழிவிளை.

மின்கம்பம் மாற்றப்பட்டது

கேசவன்புதூர் லுத்தரன் ஆலயம் அருகே உள்ள கே.கே.நகரில் இருந்த மின்கம்பம் சேதம் அடைந்து இருந்தது. அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் இருந்ததால், அதுபற்றிய செய்தி மற்றும் படம் 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன் பேரில் பழைய மின்கம்பம் மாற்றப்பட்டு, புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. அதற்காக அந்த பகுதி மக்கள் 'தினத்தந்தி'-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.


Next Story