சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஒத்திகை

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஒத்திகை நடந்தது.
நாமக்கல்:
நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி 75-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டு தோறும் சுதந்திர தின விழா கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி மாணவ, மாணவிகளின் நடன ஒத்திகை நிகழ்ச்சி நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் 8 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், 2 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் என சுமார் 1,000 பேர் நாட்டுப்பற்றை உணர்த்தும் பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி, பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இந்த நடன ஒத்திகை நிகழ்ச்சியை நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா நேரில் பார்வையிட்டார். இதில் பள்ளி ஆய்வாளர் பெரியசாமி, ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஸ்கண்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.