பாலம் கட்டிய இடங்களை சீரமைக்காததால் விபத்து அபாயம்

ஊட்டி-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டிய இடங்களை சீரமைக்காததால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டிய இடங்களை சீரமைக்காததால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
விரிவாக்க பணிகள்
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாகவும், கோவை உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து குன்னூர், கோத்தகிரி சாலை வழியாக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருவதால், குன்னூர் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், மற்ற சாலைகளில் போக்குவரத்து தடை ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகயாகவும் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதன்படி ரூ.62 கோடியில் 10 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மலை பகுதியில் சமவெளி பகுதிகளைப்போல அனைத்து இடங்களும் ஒரே மாதிரி அகலப்படுத்த முடிவதில்லை. எங்கெல்லாம் இடம் உள்ளதோ அங்கு மட்டுமே அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
வேகத்தடைகள்
அதன் ஒரு பகுதியாக ஊட்டியில் இருந்து குன்னூர் வரை சிறு பாலங்கள் கட்டப்படுகிறது. இந்த பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, சாலையில் பாலத்தின் மேற்பகுதியை சீரமைக்காததால் வேகத்தடைகள் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக தினமும் செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஏனென்றால் ஊட்டியில் இருந்து குன்னூர் வரை 70 இடங்களில் இந்த பாலங்கள் கட்டப்பட்டு, 70 இடங்களிலும் வேகத்தடைகள் மற்றும் பள்ளங்களாக இருக்கிறது.
இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பாலம் கட்டும் பணி முடிந்த பின்னர் அதன் மேற்பகுதியை சீரமைக்க வேண்டும். மேலும் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த சாலை கால மாற்றத்திற்கு ஏற்ப விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடப்பதால், இதில் கவனம் செலுத்த முடியவில்லை, ஆனாலும் இந்த டிசம்பர் மாத இறுதிக்குள் பாலம் கட்டும் பணிகளும், அதன் மேல் புறமும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.