பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்

பஸ்களின் படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்கின்றனர். பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள வழித்தடங்களை ஆராய வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
பஸ்களில் படிக்கட்டில் பயணம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் பஸ்களை போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மாணவ-மாணவிகளும், பணிகளுக்கு செல்பவர்கள் பலரும் பஸ் போக்குவரத்தையே நாடியுள்ளனர். இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதை ஆங்காங்கே காணமுடியும். குறிப்பாக `பீக் அவர்ஸ்' எனப்படும் நேரங்களில் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.
குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் தான் இந்த கூட்டத்தினை காணமுடியும். கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டாலும், அதனையும் தாண்டி பயணிகள் கூட்டம் வருவது தான் சிரமம். இதுபோன்ற நேரங்களில் பஸ்களில் படிக்கட்டுகளில் பயணிகள் பலர் தொங்கியபடியே செல்வதை காணமுடியும். `பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்யாதீர்கள்'... `படியில் பயணம் செய்தால் நொடியில் மரணம்'... என பஸ்களில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், வேறு வழியில்லாமல் ஆபத்தான பயணங்களை சிலர் மேற்கொள்ள தான் செய்கின்றனர். இதற்கு யார் மீது குற்றம் சாட்டுவது என்பது கூறமுடியாது.
வழித்தடங்களை ஆராய்தல்
பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்யாமல் கவனித்து கொள்ளும்படி டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டாலும், அவர்கள் சொன்னாலும் பயணிகள் பலர் கேட்பதில்லை. காரணம், வேறு பஸ் இல்லாததால் தான் ஆபத்தான பயணத்தையே அதில் மேற்கொள்ள வேண்டியிருக்கு என பலர் பதிலையே அவர்களுக்கு திருப்பி தருவது உண்டு.
இதுபோன்ற பயணங்களால் சில நேரங்களில் விபரீதம் ஏற்படுகிறது. இதில் அரசு பஸ், தனியார் பஸ் என பாகுபாடு கிடையாது. பொதுமக்களின் தேவைக்கேற்ப போதுமான நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. இதனால் பஸ்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்தப்படி செல்லும் வழித்தடங்களை ஆராய்ந்து கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
கந்தர்வகோட்டையை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ராஜன்:- கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் பயின்று வருகிறேன். நான் கந்தர்வகோட்டையில் இருந்து பஸ் மூலமாக தினமும் கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கிறேன். இந்த மார்க்கத்தில் மேலும் ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி இருப்பதாலும் காலையில் கல்லூரிக்கு செல்லும்போதும் மாலையில் கல்லூரி விட்டு வீட்டிற்கு வரும்போதும் அதிக கூட்டமாக இருப்பதால் மாணவர்கள் பஸ்சின் மேற்கூரையிலும், படிக்கட்டுகளிலும் தொங்கியவாறு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறும் முன்னர் கூடுதல் பஸ் வசதிகளை ஏற்படுத்தி மாணவர்களை பாதுகாக்க வேண்டும்.
படியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்
கீரனூரை சேர்ந்த ஓய்வு பெற்ற பஸ் கண்டக்டர் மனோகரன்:- எனதுபணி காலங்களில் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்தால் பஸ்சை நிறுத்தி உள்ளே ஏறச் சொல்லி பின்னர் தான் பஸ் எடுப்பது வழக்கம். 1998 முதல் பஸ்சிலிருந்து மாணவர்கள் கீழே விழுந்தால் டிரைவர் கண்டக்டர் பொறுப்பு என அரசு உத்தரவு விட்டது. மேலும் படியில் பயணம் செய்யும் மாணவர்களை உள்ளே வரும் படி கூறினாலும் அவர்கள் கேட்பதில்லை. அப்படி கூறினாலும் அவர்கள் எங்களில் தகராறில் ஈடுபடுகிறனர். நம் மாணவர்களுக்கு அறிவுரை கூறினால், அவர்கள் அதனை நமக்கு திருப்பி கூறுகின்றனர். மேலும் மாணவர்கள் அதிகமாக பயணிக்கும் வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். நான் பணியில் இருந்த போது படியில் நின்றபடி வந்த மாணவி ஒருவர் செல்போனில் பேசியபடி வந்த போது, அவர் தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார். டிரைவர்-கண்டக்டர்களின் பணி பாதிப்பு இல்லாமல் மாணவர்கள் படிகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
போலீசார் கண்காணிக்க வேண்டும்
புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த கணேசன்:- கிராமத்தில் இருந்து தொலைவில் உள்ள பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் காலை நேரங்களில் செல்லும் போது பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறது. குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக பஸ்களில் அடித்து பிடித்து செல்லும் நிலை உள்ளது. மேலும் சில இடங்களுக்கு குறைந்த அளவு பஸ்களே இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பஸ்சின் படியில் தொங்கிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி தெரியாமல் இளைஞர்கள் செல்கின்றனர். சிலர் விளையாட்டு தனமாகவே படியில் தொங்கிக்கொண்டு செல்கின்றனர். இதற்கு போலீசார் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். குறைவாக இயக்கப்படும் பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்ட நெரிசல் காரணமாக...
அன்னவாசல் அப்துல்அலி:- புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் வழியாக இலுப்பூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பள்ளிகள் முடிந்து மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்து வருகின்றனர். போதிய அளவு பஸ்கள் இன்றி கூட்ட நெரிசல் காரணமாக இந்த வழித்தடத்தில் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்கிறார்கள். இதனால் டிரைவர்கள் பஸ்சை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறாா்கள். இந்த வழித்தடத்தில் மாணவர்கள் நலன் கருதி பள்ளி நேரத்தில் மட்டுமாவது கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
கதவு உள்ள பஸ்கள்
அறந்தாங்கி அருகே விஜயபுரத்தை சேர்ந்த பட்டதாரி பெண் விஜயா:- அறந்தாங்கி நகர் பகுதியில் வழித்தடங்களில் குறைவாகவே பஸ்கள் இயக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் குறித்த நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்பதால் அந்த நேரத்தில் இயக்கப்படும் பஸ்சில் அனைவரும் செல்ல வேண்டி உள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் அனைவரும் ஒரே நேரத்தில் பயணம் செய்வதால் பஸ்சில் இடம் கிடைப்பது சாத்தியம் இல்லை. அதனால் சிறிது தூரம் தானே பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு சென்றுவிடலாம் என நினைத்து படிக்கட்டில் மாணவ-மாணவிகள் தொங்கி கொண்டு செல்கின்றனர். இது உயிருக்கு ஆபத்து என்பது தெரிந்தும் வேறு வழியின்றி செல்லும் சூழல் தற்போது உள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று நல்ல விதமாக வருவார்கள் என பல கனவுகளுடன் அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால் படிக்கட்டில் பயணம் சில நேரங்களில் விபத்துகளை ஏற்படுத்துகிறது. பஸ்சில் படிக்கட்டு பயணம் செய்யாதவாறு இருக்க பள்ளி, கல்லூரி நேரங்களில் பஸ்சின் படிக்கட்டுகளை மூடுவது போன்ற கதவுகள் உள்ள பஸ்கள் இயக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.