மகேந்திரமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு


மகேந்திரமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

மகேந்திரமங்கலம் அருகே மரத்தில் ஏறி தழை பறித்தபோது மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.

விவசாயி

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள தப்பை ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 38). விவசாயியான இவர், ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இவருடைய மனைவி சின்னம்மாள். இந்த தம்பதிக்கு 12 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் முனிராஜ் நேற்று காலை தனது தோட்டத்துக்கு சென்றார். ஆடுகளுக்கு தழை பறிப்பதற்காக அங்கிருந்த மரத்தில் ஏறினார். தழைகளை வெட்டி கொண்டிருந்தபோது, மரத்தின் அருகே சென்ற மின்கம்பி எதிர்பாராத விதமாக முனிராஜ் மீது உரசியதாக கூறப்படுகிறது.

மின்சாரம் தாக்கி பலி

இதில் அவரை மின்சாரம் தாக்கி, தூக்கி வீசியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த முனிராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் மகேந்திரமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். பின்னர் மின்சாரம் தாக்கி பலியான முனிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலகோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மரத்தில் ஏறி ஆடுகளுக்கு தழை பறித்தபோது மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story