ஏ.பள்ளிப்பட்டி அருகே விபத்தில் சலூன் கடைக்காரர் சாவு

பாப்பிரெட்டிப்பட்டி:
ஏ.பள்ளிப்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் சலூன் கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
சலூன் கடைக்காரர்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவர் ஏ.பள்ளிப்பட்டியில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி செல்வி. செல்வம் நேற்று முன்தினம் காலை தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக சேலத்துக்கு சென்றார்.
அங்கு வேலையை முடித்து கொண்டு, மாலை வீடு திரும்பி கொண்டிருந்தார். வழியில் சேலம்-அரூர் ரோட்டில் ஏ.பள்ளிப்பட்டி அருகே உள்ள கோட்டமேடு பகுதியில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சரிந்தது. இந்த விபத்தில் செல்வத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்தில் பலி
அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.