ரேஷன் கடை விற்பனையாளர் உள்பட 3 பேர் சாவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் ரேஷன்கடை விற்பனையாளர் உள்பட 3 பேர் இறந்தனர்.
சூளகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் ரேஷன்கடை விற்பனையாளர் உள்பட 3 பேர் இறந்தனர்.
ரேஷன்கடை விற்பனையாளர்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பீர்பள்ளியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 50). குருபராத்பள்ளியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் சாமல்பள்ளம் அருகில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாலாஜியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பாலாஜி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி
சூளகிரி அருகே உள்ள கர்னப்பள்ளியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (58). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு அருகில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி, மொபட் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விவசாயி
ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள கூச்சனூரை சேர்ந்தவர் அன்னையா (வயது 45). விவசாயி. நேற்று முன்தினம் இவர் சொந்த வேலையாக மத்தூருக்கு வந்தார். பின்னர் அவர் கண்ணண்டஅள்ளி அருகில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அன்னையா மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அன்னையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.