தாமிரபரணி ஆற்றில் சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
மருதூர் அணையில் இருந்து புனனக்காயல் வரை தாமிரபரணி ஆற்றில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்து உள்ளனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பொதுக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் தாலுகா பொட்டலூரணி விலக்கு மற்றும் வடக்கு காரச்சேரி கிராமத்தில் 2 தனியார் மீன் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவை மனித பயன்பாட்டுக்கு தகுதியற்றது என்று ஒதுக்கப்பட்ட அழுகிய கழிவு மீன்களை மூலப் பொருளாக கொண்டு மீன் உணவு, மீன் எண்ணெய் தயாரிப்பதாக கூறுகிறார்கள். இந்த ஆலைகளில் இருந்து வரும் துர்நாற்றம் காற்றில் கலந்து அருகில் உள்ள கிராமங்களில் மக்கள் வீடுகளில் இருக்க முடியவில்லை. பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. விவசாய நிலங்களில் நின்று விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே, இந்த நிறுவனங்களை மூட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கைது நடவடிக்கை
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த சிலரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனுகொடுத்தனர். அந்த மனுவில், தமிழக முதல்-அமைச்சர் உறுதியளித்தப்படி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவகம் அமைக்க வேண்டும். துப்பாக்கி சூடு நடைபெற்ற மே 22-ம் தேதியை சூழலியல் பாதுகாப்பு தியாகிகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
டாஸ்மாக்
பா.ஜனதா ஆழ்வார்திருநகரி கிழக்கு மண்டல தலைவரும், தென்திருப்பேரை பேரூராட்சி 2-வது வார்டு உறுப்பினருமான பி.குமரேசன் தலைமையில் பா.ஜனதா கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை- திருச்செந்தூர் சாலையில் தென்திருப்பேரையில் குரங்கணி செல்லும் சாலை சந்திப்பில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் 500 மதுபான கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்த 500 கடைகளில் இந்த டாஸ்மாக் கடையையும் சேர்த்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
சீமை கருவேலமரங்களை...
தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி தலைவர் அ.வியனரசு, தலைமையில் ஏர் உழவர் அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் மு.ராசேசு, தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் காந்தி மள்ளர் மற்றும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்ச எ.வ.வேலு சட்டப் பேரவையில் அறிவித்த தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுபடி முதன் முதலில் வாகைக்குளம் சுங்கச்சாவடியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சிமொழிச் சட்ட அரசாணை படி மாநகராட்சி பஸ்நிலைய வணிக வளாகங்கள் மற்றும் தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளின் பெயர்ப் பலகைகளை தமிழில் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் மருதூர் அணை முதல் புன்னக்காயல் வரை சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளாதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.