உளுந்தூர்பேட்டை அருகே ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றம் அதிகாரிகளை மிரட்டிய தாய், மகன் கைது

உளுந்தூர்பேட்டை அருகே ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றப்பட்டது. அப்போது அதிகாரிகளை மிரட்டிய தாய், மகன் கைது செய்யப்பட்டனா்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை வீடு மற்றும் கொட்டகை அமைத்து இருந்தார்.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் அதிகாரிகள் அகற்ற முயற்ற முயன்ற போது, அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் நீண்டகாலமாக அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி தலைமையில், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினர். முன்னதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போ லீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஆக்கிரமிப்பு அகற்ற சென்றபோது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் கொடுத்ததாக திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆக்கிரமிப்பாளர்கள் தவிட்டம்மாள் (வயது 50), அவரது மகன் பிரகாஷ் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.