சேலத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்
ஓய்வூதியர்கள் சங்கம்
சேலம் மாவட்ட அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் ஜோதிமதன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் அருள்மொழி வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் சுப்ரமணியம், மாவட்ட செயலாளர் நேதாஜி சுபாஷ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.
மத்திய அரசு வழங்கும் தேதியன்றே, மாநில அரசும் அகவிலைப்படியை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான சந்தா தொகை உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும். 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தற்காலிக பணி நீக்கம்
சத்துணவு, அங்கன்வாடி, வனத்துறை, ஊராட்சி செயலாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு கால முறை ஊதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். பணி நிறைவு நாளன்று பணியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
தற்காலிக பணி நீக்கம் ஒரு ஆண்டுக்கு மேலும் நீடிப்பதை ரத்து செய்து, முறையான பணி நிறைவு ஆணையை வழங்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட ரெயில் பயணச்சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் அருணகிரி நன்றி கூறினார்.