விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

விராலிமலை ஒன்றியம், மாத்தூரில் சுமார் 7 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியினர் யாராவது இறந்தால் அவர்களின் உடலை விவேகானந்தா நகர் அருகே உள்ள பொது மயானத்தில் 1964-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விவேகானந்தா நகர் வழியே செல்லும் மயான பாதையை அப்பகுதியினர் சிலர் ஆக்கிரமித்து கல் ஊன்றி இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வருவாய்த்துறையினருக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை மயான சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மாத்தூர் விவேகானந்தா நகர் மயான சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், விவேகானந்தா நகர் மற்றும் அண்ணா நகர் பகுதியில் குடியிருக்கும் பலருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நேற்று மாத்தூர் பீலிகான் கோவில் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஏழுமலை வரவேற்று விளக்க உரையாற்றினார். இதில் தொழிலாளர் சங்கத்தினர் கலந்துகொண்டு மயான சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கும் அண்ணா நகர் விவேகானந்தா நகர் பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்குவதற்கும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story