பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா?

கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகத்தில் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகத்தில் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாசன வாய்க்கால்
கூத்தாநல்லூர் அருகே உள்ள, விழல்கோட்டகம் கிராமத்தில், தெற்கு சேத்தி பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த பாசன வாய்க்கால் வழியாக, கோரையாற்றில் இருந்து வரும் தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு கொண்டு சென்று, ஒவ்வொரு ஆண்டும், நெல், உளுந்து, பயறு மற்றும் பருத்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த பாசன வாய்க்காலில் காட்டாமணக்கு செடிகள், கோரை நார்கள், தேங்கி குப்பைகளால் சூழப்பட்டுள்ளது.
கருகும் பயிர்கள்
புதர்களுக்கு மத்தியில் பாசன வாய்க்கால் காணாமல் போய் விட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு பாசன வாய்க்காலின் மையத்தில் செடிகள் வேரூன்றி காணப்படுகிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் முழுமையாக வயல்களுக்கு சென்றடைவதில்லை. ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் கூட, பாசன வாய்க்கால் மூலம் போதிய தண்ணீர் சென்றடையாததால், பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ளன.இதனால் பயிர்களை காப்பாற்ற பம்புசெட் மூலம் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகிறார்கள். எனவே, விழல்கோட்டகத்தில் பாசன வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.