தேவாலாஅட்டி-நாடுகாணி செல்லும்சாலையோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தேவாலாஅட்டி-நாடுகாணி செல்லும் சாலையோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பந்தலூர்
தேவாலாஅட்டி-நாடுகாணி செல்லும் சாலையோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சாலையில் ஆபத்தான பள்ளம்
பந்தலூர் அருகே தேவாலா அட்டி வழியாக நாடுகாணி உள்பட பல பகுதிகளுக்கு நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான சாலை உள்ளது. இந்த சாலையில் ஏராளமான தனியார் வாகனங்களும் பசுந்தேயிலை இலைகளை ஏற்றி செல்லும் லாரிகளும்களும் பள்ளி வாகனங்களும் ஆம்புலன்களும் அதிகளவில் சென்றுவருகிறது. இந்த நிலையில் தேவாலாஅட்டியிலிருந்து நாடுகாணி செல்லும் சாலையோரத்தில் பள்ளம் விழுந்து இதுவரை மூடாமலும் தடுப்புசுவர் அமைக்கபடாமலும் உள்ளது பள்ளம் விழுந்த போதே சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நெல்லியாளம் நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் தற்போது பள்ளம் பெரிதாகி காணப்படுகிறது. இதனால் அந்தவழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது.
தடுப்புச்சுவர் வேண்டும்
அவசர தேவைகளுக்கு நோயாளிகளையும் கர்ப்பிணி பெண்களையும் ஏற்றிசெல்லும் ஆம்புலன்ஸ்களும் விபத்தில் சிக்குகிறது. மேலும், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்துசெல்லும் போது தவறி பள்ளத்தில் விழுந்து காயங்கள் ஏற்படுகிறது. அதனால் தேவாலா அட்டியிலிருந்து நாடுகாணி பாண்டியார்குடவுன் செல்லும் இணைப்பு சாலையோரத்தில் உள்ள பள்ளம் மற்றும் சாலையை சீரமைப்பதோடு, தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- அட்டியிலிருந்து நாடுகாணிக்கும் தேவாலாவுக்கும் செல்லும் சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்லமுடிவதில்லை. அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ்களும் செல்லமுடிவதில்லை. எனவே பள்ளத்தை ஒட்டி தடுப்புசுவர் அமைத்து சீரமைக்க நெல்லியாளம் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.