வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி அறிவுறுத்தினார்.
கண்காணிப்பு குழு கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் கனிமொழி எம்.பி ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த திட்டத்தில் செயல்படுத்த வேண்டிய மீதமுள்ள இலக்கை விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டத்தில் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள் என்ற நிலையை உருவாக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மக்கும் குப்பைகளை நுண்ணுயிர் குழி மையத்தில் சேகரித்து வைத்து அதன் மூலம் இயற்கை உரம் தயார் செய்ய வேண்டும். அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக உரத்தை பொதுமக்களுக்கு விdpயோகம் செய்ய வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
எல்லோருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை அதிகாரிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு வேலையை செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணங்கள் சொல்லிக்கொண்டே இருக்கலாம். செயல்களை செய்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். அங்கன்வாடி கட்டிடங்கள் பழுதடைந்திருந்தால் உடனடியாக வாடகை கட்டிடங்களுக்கு மாற்ற வேண்டும். மேலும் பழுதடைந்த கட்டிடங்ககளை உடனடியாக பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் அரசாங்கத்துக்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றுகிறோம். அனைவருக்கும் நிறைய வேலைகள் இருக்கிறது. கொஞ்சம் கஷ்டப்பட்டு அந்த வேலைகளை செய்தால் அடுத்த தலைமுறைக்கு அது மிகப்பெரிய விஷயமாக மாறும். எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். அரசின் நோக்கம் அறிந்து அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அனைத்து வளர்ச்சி பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.