ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க முகாம்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க முகாம்கள் இன்று நடக்கிறது.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புற பகுதியில் வாழும் 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் இப்பருவத்தில் குடற்புழு தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமான திறந்த வெளியில் மலம் கழிப்பதால் உற்பத்தியாகும் குடற்புழுக்கள் மனித உடலில் சென்று குடல் பகுதியில் தங்கி ஊட்டச்சத்து மற்றும் ரத்தத்தினை உண்டு வருவதால் குழந்தை மற்றும் மாணவ பருவத்தினருக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. இதையடுத்து, தேசிய குடற்புழு நீக்க முகாம் இன்று (வியாழக்கிழமை) தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து ஊட்டச்சத்து மையங்களில் நடக்கிறது. 1 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவ, மாணவிகள், 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்கள் ஆகியோருக்கு 'ஆல்பண்டசோல்' எனும் குடல் புழுநீக்கம் செய்யும் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 24-ந்தேதி அனைத்து சுகாதார மையங்களிலும் முகாம் நடக்கிறது.
முகாமில் 4 லட்சத்து 63 ஆயிரத்து 935 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. எனவே முகாம் நடக்கும் இடங்களில் குடற்புழு நீக்கம் செய்யும் மாத்திரையினை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.