திப்ரூகர் ரெயிலில் ஏறிய பயணிகளால் பரபரப்பு


திப்ரூகர் ரெயிலில் ஏறிய பயணிகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பதிலாக திப்ரூகர் ரெயிலில் ஏறிய பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து அந்த ரெயிலை நடுவழியில் நிறுத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பதிலாக திப்ரூகர் ரெயிலில் ஏறிய பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து அந்த ரெயிலை நடுவழியில் நிறுத்தினர்.

திப்ரூகர் ரெயில்

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தினமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு 6.02 மணிக்கு நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடையும். பின்னர் இங்கிருந்து மாலை 6.07 மணிக்கு புறப்பட்டு சென்னை செல்லும்.

நேற்று முன்தினம் மாலை நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறுவதற்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அப்போது கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.45 மணிக்கு திப்ரூகர் செல்லும் ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தினர்

இதை பார்த்ததும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் என நினைத்து சில பயணிகள் அந்த ரெயிலில் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள். முதல் பிளாட்பாரத்தில் வந்த இந்த ரெயில் சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சிறிது நேரத்தில் ஒழுகினசேரி பகுதியில் சென்றபோது திருவனந்தபுரம் வழித்தடத்திற்கு ரெயில் திரும்பியது. இதனால் அந்த ரெயிலில் ஏறிய பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பதிலாக வேறு ெரயிலில் ஏறியதை உணர்ந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதைத்தொடர்ந்து ரெயில் நடுவழியில் நின்றது.

பின்னர் அதிலிருந்து இறங்கிய பயணிகள் தண்டவாளம் வழியாக ரெயில் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே ரெயில் நடுவழியில் நின்றதையடுத்து ரெயில்வே அதிகாரிகளும் போலீசாரும் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது தான் ரெயில் பயணிகள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் என்று நினைத்து திப்ரூகர் ரெயிலில் தவறுதலாக ஏறி விட்டதாக கூறினார்கள். இதனால் நேற்று முன்தினம் மாலை ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அறிவிப்புகள் வெளியிடவில்லை

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது. திப்ரூகர் ரெயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகள் இங்கு வந்து சேருவதற்கு முன்னதாகவே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாரானது. இதனால் பயணிகள் அவசரமாக ஓடி வந்து ரெயிலை பிடித்தனர். பின்னர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, "ரெயில் நிலையத்தில் சரியான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வரக்கூடிய நேரத்தில் கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் ரெயில் வந்தது. அறிவிப்புகள் வெளியிடாததால் வேறொரு ரெயிலில் ஏறி விட்டதாகவும், எனவே ரெயில் நிலையத்தில் முறையான அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.


Next Story