உடல் நலக்குறைவால் இறந்தபோலீஸ் மோப்ப நாய் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம்

அரசு மரியாதை
ஈரோட்டில் துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் ஜெர்ரி என்ற ஜெர்மன் செப்பேடு வகையை சேர்ந்த நாய் இருந்து வந்தது. ஜெர்ரிக்கு மூன்று வயது ஆகும். கடந்த ஒரு வாரமாக ஜெர்ரி உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தது. இதனை அடுத்து மோப்பநாய் படை பிரிவு காவலர்கள் ஈரோடு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஜெர்ரி உயிரிழந்தது. குற்றம் மற்றும் திருட்டு வழக்குக்கு உதவியாக இருந்த மோப்பநாய் உயிரிழந்ததை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் மோப்ப நாய் ஜெர்ரிக்கு மாவட்ட குற்ற பதிவேடு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டு மோப்ப நாய் ஜெர்ரிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி ஆனைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஈரோடு துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவின் நாய்ப்பட்டி கட்டிடம் அருகே அரசு மரியாதையுடன் மோப்ப நாய் ஜெர்ரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.